ஞாயிறு, 20 மார்ச், 2011

கருப்பு வெள்ளி – (Black Friday) - ஜப்பானின் சோகம்


சுனாமி நினைவுச்சின்னம்-கன்னியாகுமரி 

ஜப்பான் தேசத்திற்கு 11/03/2011 வெள்ளியன்று சோகம், நிலநடுக்கம் மற்றும் சுனாமி வடிவில் விஜயம் செய்தது. ஜப்பான் நிலநடுக்கப் பிரதேசத்தில்  (Seismic Zone) இருப்பதால் அங்கு அதற்கேற்ப வீடுகள் பொறியியல் வல்லுனர்களால் பெரும்பாலும் குறைந்த உயரமுடையவையாக வடிவமைக்கப்பட்டு மரத்தால் கட்டப்பட்டுள்ளன.   சென்டாய் நகரம் உருக்குலைந்து போனது. நில நடுக்கத்திற்கு தாக்குப்பிடித்து நின்ற வீடுகள், வரம்புமீறி வந்த ராட்சச அலகளால் தூக்கி வீசப்பட்டன. கிழக்கு கடற்கரை ஊர்கள் சுனாமியின் ஆக்கிரமிப்பால் வெள்ளக்காடாயின. எங்குநோக்கினும் துயரக்குரல்கள். யாராலும் யாருக்கும் உதவமுடியவில்லை. இயற்கையின் சக்திக்கு முன்னர் எந்த ஒரு விஞ்ஞானப் பாதுகாப்பு வளையமும் ஈடுகொடுக்கவில்லை. ஏறக்குறைய 20,000 பேர் இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
'பட்ட காலிலே படும்' என்பதுபோல், சோகத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் ஜப்பானுக்கு மேலும் ஒரு அடி ஃபுகுசிமா அணுசக்தி நிலையத்திலிருந்து கிளம்பியது. அங்குள்ள அணு உலைகள் வெடித்துச் சிதறியதனால் வெளிப்பட்ட அணுக்கதிர் வீச்சால் (தற்போது கதிர்வீச்சின் தாக்கம் INES நிலை 5 க்கு உயர்ந்துள்ளது) டோக்கியோ உட்பட பல நகர மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இது இந்தியா உட்பட உலகநாடுகள் அனத்திலும் அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு பற்றிய அச்சத்தை கிளப்பிவிட்டுள்ளன.
உறவுகளை இழந்து வாடும் ஜப்பானிய மக்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்கள், விரைவில் குணம்பெற எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக!

இரண்டாம் உலகப்போருக்குப் பின் வீறுகொண்டு எழுந்தது போல் ஜப்பான் மீண்டும் எழும் - சரித்திரம் மீண்டும் திரும்பும்.